×

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரம்-மு.க.ஸ்டாலின், சென்னை-கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின், சென்னையில் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன.

இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசின் இந்த 3 சட்டங்களுக்கு எதிராக கடந்த 25ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழகத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் எதிரான ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதிகளை மீறி, 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் திமுக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்கிறார். இதில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் வள்ளூவர் கோட்டம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன் பங்கேற்கிறார். இதில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் கொருக்குபேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  பங்கேற்கிறார். இதில் திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம்  உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தஞ்சாவூர்-இரா.முத்தரசன், திருச்சி-கே.எம்.காதர் மொய்தீன், கடலூர்-திருமாவளவன் எம்.பி, தாம்பரம்- எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை-ஈ.ஆர். ஈஸ்வரன், பெரம்பலூர்- ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்கிறார். மற்ற மாவட்டங்களில் அந்தந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணியினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வணிக சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : parties ,district capitals ,government ,Kanchipuram-MK Stalin ,Vaiko ,K. Balakrishnan ,Chennai-KS Alagiri , All parties protest in district capitals today against central government's agrarian amendment laws: Kanchipuram-MK Stalin, Chennai-KS Alagiri, Vaiko, K Balakrishnan participate
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்