×

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்; கள்ளக்குறிச்சி ரிங்ரோடு திட்டம்: செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்து கடந்த 10 மாதங்களாகிவிட்டன. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. சேலம், ஈரோடு-சென்னைக்கு மையமாக கள்ளக்குறிச்சி இருப்பதால், பேருந்து நிலையம் மிகப்பெரிய சந்திப்பாக மாறிவிட்டது. கல்வி நிறுவனங்களால் காலை, மாலை நேரங்களில் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது போதாதென்று வியாபார நிறுவனங்கள், அரிசி ஆலைகளின் சரக்கு வாகனங்களும் அணிவகுப்பதால் நெரிசலை தீர்ப்பது இடியாப்ப சிக்கல்தான். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பை மையமாக வைத்து,  சேலம் மெயின்ரோடு, கச்சேரி சாலை, துருகம் சாலை, காந்தி ரோடு சந்திக்கிறது.

சாலையோரத்தை கார், பைக் போன்ற வாகனங்களும் ஆக்கிரமித்து கொள்வதால் மிகக்குறுகலாகிவிட்டது. கரும்பு அரவை காலத்தில் சங்கராபுரம், தச்சூர் பகுதியில் இருந்து வரும் கரும்பு டிராக்டர்களும் மாற்றுவழி இல்லாததால்,  கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் வந்து முட்டிக்கொண்டு நீண்ட வரிசையில் அணிவகுக்கின்றன. கள்ளக்குறிச்சிக்கு ரிங்ரோடு அமைத்தால் சேலத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சென்று வரும் வாகனங்கள் நகரில் நுழைவதை  தடுத்துவிடலாம். வெளியூர் வாகனங்கள் நகருக்குள் வராமல் இருந்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும். எனவே, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு திட்டத்தை உடனே துவங்க எம்எல்ஏ, எம்பிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது, ரிங்ரோடு அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி வழங்கியது.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை (திட்டம் மற்றும் பாலங்கள்) அதிகாரிகளிடம் கேட்டபோது: கள்ளக்குறிச்சிக்கு ரிங்ரோடு என்பது முழு வட்ட வடிவமாகும். இதில் அரை வட்ட வடிவ சாலை ஏற்கனவே உள்ளது. அதாவது மாடூர் டோல்கேட்டில் இருந்து உலகங்காத்தான் வரை இருக்கிறது. இன்னும் ஒரு அரை வட்ட சாலை போட்டால் போதுமானது. அதாவது சடையம்பட்டு, சிறுவங்கூர் மெடிக்கல் காலேஜ், மாடூர், டோல்கேட் வரை போட்டால் போதுமானது.  தற்போது பஸ்நிலையம் நகரின் உள்ளே இருப்பதால் நெருக்கடி ஏற்படுகிறது.

அதனால் ரிங்ரோடு எளிதாக இணைக்கும் வகையில் மருத்துவக்கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி, பஸ்நிலையம் ஆகியவை அமையும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். குறைந்தது 3 முதல் 4 திட்ட அறிக்கைகள் தயாரித்து ஆலோசனைக்கு பின்னரே இறுதி வடிவம் எடுக்கும். அதில் எந்த திட்ட அறிக்கையில் நில எடுப்பு குறைவானது, குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள் அடிபடாமல் உள்ளதா? கட்டுமான பணி செலவு குறைவு உள்ளிட்ட பல்வேறு சாதக,  பாதகங்கள் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகே முழு வடிவம் பெறும். இறுதி முடிவை மாவட்ட ஆட்சியர் எடுத்தபிறகே, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும், என்றனர்.

ஆக்கிரமிப்பால் ஏற்படும் நெரிசல்
சேலம் மெயின்ரோடு, கச்சேரி சாலை, துருகம் சாலை, காந்தி ரோடு என நான்கு சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. இதன்காரணமாக  தடையற்ற போக்குவரத்து இல்லாததே நெரிசலுக்கு மற்றொரு காரணமாகிவிடுகிறது. சில  நேரங்களில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தபடியே செல்லும். எனவே ஆக்கிரமிப்பை அகற்றுவதில் உறுதியாக இருந்தாலே இப் பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு காணமுடியும். 4 சாலைகளிலும் சாக்கடை கால்வாய்கள் திறந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பதாலும் பேருந்து, டிராக்டர் செல்லும்போது  பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் ஒதுங்க கூட இடம் இல்லாமல் சிக்கிக் கொள்கின்றனர்.

‘கிடப்பில் போட்ட அதிமுக அரசு’
உதயசூரியன் எம்எல்ஏ கூறுகையில், கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட ரிங்ரோடு வசதி வேண்டுமென கடந்த 2010ம் ஆண்டு முதல் சட்டமன்றத்தில் பேசினேன். ஆய்வு செய்வதாக அரசும் அறிவித்தது. அதற்கு பின் வந்த அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டது. அதேபோல் பெருவங்கூர், சிறுவங்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கரும்பு ஏற்றி வரும் டிராக்டர் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகரின் வழியாக வருவதாலும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் கோமுகி சர்க்கரை ஆலைக்கு செல்ல பெருவங்கூர்-சிறுவங்கூர்-மோகூர்-சோமண்டார்குடி-சடையம்பட்டு-மட்டிகைகுறிச்சி-தோப்பூர்  வழியாக ஆலைக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்க சட்டமன்றத்தில் பேசினேன். அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது, என்றார்.



Tags : Get a permanent solution to traffic congestion; Counterfeit Ring Road Project: When will it come into operation?
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...