×

‘கொரோனா குறைவது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று கூறிய முதல்வர் பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுவதா? பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று கூறி முதல்வர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில், அவர் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது எனப் பாராட்டும் நிர்பந்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதிலும், தினமும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரைக் குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கொரோனாவில் தோற்று விட்ட அதிமுக அரசுக்கு பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது ஆச்சர்யமளிக்கவும் இல்லை; அதிர்ச்சியளிக்கவும் இல்லை; ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல்-மூச்சுத் திணறி- எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, முதலமைச்சரே கைவிரித்து விட்ட பிறகு - அவர் தலைமையிலான அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது.  தமிழகத்தில் நோய்த் தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தினமும் நோய்த் தொற்று குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறிய அன்று, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999; இறந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரம். ஏன், 5 ஆயிரத்திற்கும் மேல் “தினசரி பாதிப்பு” என்ற நிலை, ஜூலை 22-ஆம் தேதி முதலில் ஏற்பட்டது; இந்த தினசரி பாதிப்பு 64 நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழே வரவில்லை.

தொடர்ந்து நோய்த் தொற்று 5 ஆயிரத்திற்கும் மேல் தான் நீடிக்கிறது. இவ்வளவு மோசமாக அனைத்து மாவட்டங்களும் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்- பிரதமர் அப்படியொரு பாராட்டுரை வழங்குகிறார் என்றால்; அவருக்கே தமிழக அரசு, உண்மைகளைத் திரித்து, மாறான புள்ளி விவரங்களைத் தான் கொடுத்திருக்கிறதா அல்லது அதிமுக அரசின் பாதுகாப்புக்கு, அரசியல் அடிப்படையில், பங்களித்திடும்  நிலைக்கு வந்து விட்டாரா என்ற நியாயமான கேள்வி தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயல்பாகவே எழுந்துள்ளது.  கொரோனா பரிசோதனைகள் குறித்து, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு கடந்த 15ம் தேதி, மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்த பதிலில், “மார்ச் முதல் ஜூன் வரை 10,08,482 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளது.

ஆனால் ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்ட மாநில அரசின் “தினசரி செய்தி குறிப்பில்” , 11,16,622 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நான்கு மாதங்களில் மட்டும்- மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலுக்கும்- அதிமுக அரசின் தினசரி செய்திக் குறிப்பில் வெளியிடும் கணக்கிற்கும், ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் வேறுபாடு! ஜூலை- ஆகஸ்ட்- செப்டம்பர் மாத பரிசோதனைகளில், அதிமுக அரசின் “பொய்க் கணக்கு” என்ன? இப்படியொரு வேறுபாடு எப்படி ஏற்பட்டது என்பதாவது பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டதா?. ஆகவே கொரோனாவில் அதிமுக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது  என்ற “பாராட்டுப் பத்திரத்தை” வழங்கியிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி-தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம், ஒரு “ரகசிய விசாரணைக்கு” உத்தரவிட்டு-அதிமுக அரசின் கொரோனா படுதோல்விகளையும்- கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழக மக்கள் நலன் மீது பிரதமருக்கு  உண்மையிலேயே அக்கறை இருக்கும் என நம்புகிறேன். எனவே, “கூட்டணிக் கட்சி” என்ற  குறுகலான எல்லையைக் கடந்து வந்து- அகன்று விரிந்திருக்கும் ஒரு நாட்டின் பிரதமராக; அதிமுக அரசின் கொரோனா தோல்வி-தமிழகத்தின் பொருளாதார மேலாண்மைப் பின்னடைவு - தொழில் வளர்ச்சித் தேக்கம் -  வேலையின்மை - ஏழை எளிய நடுத்தர மக்களின் அதிருப்தி-கடும் நிதிப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடி- நிர்வாகச் சிதைவு - எனப் பலமுனைத் தோல்விகள் அனைத்தையும் அறிந்து கொள்வதுடன்; ஒவ்வொரு பிரிவு குடிமக்களும் எத்தகையை உபத்திரவங்களுக்கும், இன்னல்களுக்கும்  ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பெரும்பான்மையோர்  எதிர்க்கும் “வேளாண் மசோதாக்களை” ஆதரித்த காரணத்திற்காகவும்; அன்றைய தினம் பிரதமருடனான காணொலி ஆலோசனையின் துவக்கத்திலேயே, “விவசாயிகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்த உங்களைப் பாராட்டுகிறேன்” என்ற முதல்வர் பழனிசாமியின்  “முகமனை” ஒட்டியும்; கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்று பிரதமரை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் சூடு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தடை செய்யப்பட்ட குட்கா வழக்கில் இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அநீதியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு,  நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும்  சூடு போட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Palanisamy ,government ,God ,MK Stalin , Does Chief Minister Palanisamy, who said ‘God only knows the corona is low’, appreciate that the government has done a better job? MK Stalin's question to the Prime Minister
× RELATED சுகாதாரத்துறை சார்பில் கொரோனா...