×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கொரோனாவுக்கு பலி: 2 வார சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பெங்களூரு: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் குறையாமல் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த சுரேஷ் அங்கடிக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 14ம் தேதி முதல் துவங்கிய மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று கண்டறியபட்டது. கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, சுரேஷ் அங்கடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று இரவு அவர் உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. சுரேஷ் அங்கடியின் திடீர் மரணம் அரசியல்  தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாசிடிவ்  கண்டறியப்பட்ட அவர், இதுவரை எந்தவிதமான நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றதில்லை. எந்த தீய பழக்கமும் இல்லாத நிலையில் அவர் திடீரென கொரோனா  பாதித்து காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, குமாரசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பா.ஜ மூத்த தலைவரான சுரேஷ் அங்கடி(65) கர்நாடக மாநிலம் பெலகாவி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆவார். கர்நாடகா மாநிலத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் மத்திய அமைச்சர்
கொரோனாவுக்கு நாடு முழுவதும் பல எம்.பி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் பலியாகியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீட்டனர். ஆனால், கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி ஆவார்.

* ஒரு வாரத்தில் இரு எம்பிகள் பலி
கர்நாடக மாநில சட்டபேரவையில் இருந்து பாஜ சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கஸ்தி, கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி காலமானார். ஒரு வாரத்திற்குள் மற்றொரு மக்களவை பாஜ உறுப்பினர் சுரேஷ் அங்கடி காலமாகியுள்ளது கவலை ஏற்படுத்தியுள்ளது.

* 4 முறை மக்களவை உறுப்பினர்
கர்நாடக மாநிலம், பெலகாவி தாலுகா, கே.கே.கொப்பா கிராமத்தில் பசப்பா அங்கடி-சோமவ்வா தம்பதியரின் மகனாக கடந்த 1955 ஜூன் 1ம் தேதி சுரேஷ் அங்கடி பிறந்தார். ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வியை கிராமத்தில் முடித்த அவர், எஸ்.எஸ்.எஸ். சமிதி கல்லூரியில் இளங்கலை பட்டமும் ராஜகோபால்கவுடா சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டபின், பாஜவில் இணைந்து மாவட்ட அளவில் பல பொறுப்புகள் வகித்தார். கடந்த 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பெலகாவி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவையில் கால் பதித்தார். தொடர்ந்து 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சியில் கடந்த ஓராண்டு காலமாக ரயில்வே இணையமைச்சராக இருந்தார்.

Tags : Union Minister ,Corona ,Delhi Aims Hospital , Union Minister Corona dies at Delhi Aims Hospital: 2 weeks without treatment
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...