×

தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழகத்திற்கு மருத்துவ உட்கட்டமைப்புக்காக  ரூ.3000 கோடி வழங்கக்கோரி  பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு  அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி,  ஆந்திரா, கர்நாடகா  உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தப்படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா,  உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். கொரோனா நிலவரம்  குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் நாள்தோறும் 85,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கான செலவில் 50% மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 46,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இறப்பு விகிதம் 1.6 என்ற குறைந்த விகிதத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 90% பேர் குணமடைந்துள்ளனர்; சென்னையில் தொற்று 1000-க்கும்  கீழ் குறைக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. மருத்துவ உட்கட்டமைப்புக்கு ரூ.3000 கோடியும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்க வேண்டும்.  மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேசினார். 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


Tags : Tamil Nadu ,Modi ,Palanisamy ,Corona , Corona test costs Rs 6.8 crore a day: Tamil Nadu needs Rs 3,000 crore...
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து