×

மும்பை அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில் ‘ஜிலானி’ என்ற 3 மாடி கட்டிடத்தில் உள்ள 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

அதிர்வை உணர்ந்து கண் விழிக்கும் முன்பே பலர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். கட்டிடம் இடிந்த சத்தம்கேட்டு எழுந்து வந்த அப்பகுதி மக்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட 13 பேரின் உடல்களை மீட்டனர். இதேபோல இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 20 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், தற்போது மேலும் 6 பேரின் உயிரற்ற உடல்களை மீட்புப்படையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர். இதனால் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் கட்டிட உரிமையாளர் சையத் அகமது ஜிலானி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai ,Bhiwandi , 3-storey building collapses in Bhiwandi near Mumbai; The death toll has risen to 20
× RELATED 2வது சூப்பர் ஓவரில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை