×

சிறுபான்மை நலத்திட்ட நிதிச்செலவை படிப்படியாக குறைத்த உபி பாஜ அரசு: 5 ஆண்டில் வெறும் 9.9% ஆக சரிந்தது

புதுடெல்லி: சிறுபான்மை நலத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில், உ.பி பாஜ அரசு 10 சதவீதம் கூட செலவு செய்யவில்லை என அம்பலம் ஆகியுள்ளது. உ.பியில் சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி குன்வர் டேனிஷ் அலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சிறுபான்மையின விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமர் ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ் உ.பி அரசுக்கு 2019-20 நிதியாண்டில் 162.07 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உ.பி அரசு 16.2 கோடியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த 2015-16 நிதியாண்டில் மத்திய அரசு சிறுபான்மையினர் நலனுக்காக 324.62 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அப்போதைய சமாஜ்வாதி அரசு, 202.48 கோடியை பயன்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய அரசு நிதியில் 62.37 சதவீதம் சிறுபான்மையினர் நலனுக்காக பயன்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிதியாண்டுகளில், அதாவது 2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டுகளில் மத்திய அரசு நிதியில் 40 சதவீதம், 2018-19 நிதியாண்டில் 31.3 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் வெறும் 9.9 சதவீதமாக சரிந்து விட்டது.

மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களை உ.பி. அரசு மட்டுமே நிறைவேற்றுவதாக கூறப்பட்டது.  ஆனால், அதிக சிறுபான்மையினர் உள்ள அந்த மாநிலத்தில் நல நிதி பயன்பாட்டை உ.பி அரசு குறைத்துள்ளது, சிறுபான்மையினர் நலனை புறக்கணிக்கும் வகையில் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.



Tags : government ,UPA ,Minority , UPA government gradually cuts spending on minority welfare: falls to just 9.9% in 5 years
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...