×

ரேஷன் கடை முன் குப்பைபோல் குவிந்து கிடக்கும் கொரோனா ‘கிட்’: பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் 50கி, விட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரை, ஆர்சானிக் ஆல்பம் உள்ளிட்டவை அடங்கிய கிட் பைகள் வழங்கப்பட்டது. இதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், ேகாவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பு கிட் பைகள் உரிய பாதுகாப்பின்றி அலட்சியமாக கடையின் முன்பு சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர்.

பருவமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் அளித்த கிட்களை அலட்சியமாக வெளியில் வைத்துள்ளதால், அவை மழையில் நனைந்து நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை முறையாக அலுவலர்கள் பாதுகாக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “ரேஷன் கடையின் வெளியில் குப்பைபோல் போட்டு வைத்துள்ளனர். இதனை யாருக்கும் விநியோகிக்காமல் வைத்துள்ளனர். இதனால், மழை, வெயிலில் கிட் வீணாகும் நிலையிருக்கிறது. இந்த கிட்களை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை பாதுகாப்பாக வைக்காத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Corona ,ration shop , ரேஷன் கடை முன் குப்பைபோல் குவிந்து கிடக்கும் கொரோனா ‘கிட்’: பொதுமக்கள் அதிர்ச்சி
× RELATED வராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்