×

சேலம் வழியே இயக்கப்படும் 8 ரயில்களில் பாதியளவு பயணிகளே பயணம்

*வார இறுதி நாட்கள் மட்டும் நிரம்புவதாக அதிகாரிகள் தகவல்


சேலம் : சென்னை-கோவை மார்க்கத்தில் சேலம் வழியே இயங்கும் 8 ரயில்களில் 40 முதல் 50 சதவீத பயணிகளே தினமும் பயணிக்கின்றனர். வார இறுதி நாட்களில் மட்டும் நிரம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு ஜூன் மாதம் முதல் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கத்திற்கு வந்தநிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கத்திற்கு வந்துள்ளது. இதில், சென்னை-கோவை மார்க்கம், சென்னை-திருச்சி-மதுரை மார்க்கம், கோவை-மயிலாடுதுறை மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-கோவை மார்க்கத்தில் சேலம் வழியே தினமும் 8 ரயில்கள், இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் ஆரம்பத்தில் இருக்கைகள் நிரம்பின. தற்போது, அனைத்து சிறப்பு ரயில்களிலும் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

பகல் நேரத்தில் இயங்கும் சென்னை-கோவை இண்டர்சிட்டி, சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் (இருமார்க்கம்) தினமும் 40 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். மீதி இருக்கைகள் அனைத்தும் காலியாக செல்கிறது. இதேபோல், இரவு நேரத்தில் இயங்கும் சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை நீலகிரி எக்ஸ்பிரஸ் (இருமார்க்கம்) ரயில்களிலும் பயணிகள் கூட்டம் இன்றி, வெறுமனே செல்கிறது. இந்த ரயில்களிலும் பாதியளவு பயணிகளே செல்கின்றனர். கொரோனா காரணமாக வேலையின்றி சொந்த ஊர்களுக்கு திரும்பிய மக்கள், மீண்டும் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு திரும்பாமல் உள்ளனர்.

காரணம், அங்கு இன்னும் வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், சொந்த ஊர்களிலேயே இருக்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிக்கும் மக்கள் வெகுவாக குறைந்துள்ளனர். இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை-சென்னை மார்க்க ரயில்களில் வார நாட்களில் மக்கள் அதிகளவு பயணிப்பதில்லை. 40 முதல் 50 சதவீத பயணிகள் தான், டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பிவிடுகிறது. சென்னையில் வேலை பார்க்கும் நபர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவைக்கு திரும்புகின்றனர்.

அதேபோல், இங்கிருந்து சென்னைக்கு செல்கின்றனர். அதனால், வார இறுதி நாட்களில் மட்டும் 8 ரயில்களிலும் இடம் இருப்பதில்லை. மற்ற நாட்களில் பயணிகள் வருகை அதிகரிக்க, தொழில், வேலைவாய்ப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் தான் இருக்கும். அதுவரையில் ஒன்றும் செய்ய முடியாது,’’ என்றனர்.


Tags : passengers ,Salem , Indian Railways, Trains, Morning Trains, Salem, Chennai, Coimbatore
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...