×

நீட் தேர்வுக்கு எதிராக சாகும்வரை போராட்டத்தை கைவிட்டு மக்கள் சக்தியை அணி திரட்டும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 13 உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு ரத்து என்பது சட்டப் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அடைய வேண்டிய இலக்கு ஆகும். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மக்கள் பாதை மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கூறி இருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஆரா அருணா, சந்திரமோகன், அரவிந்த், தமிழ்செல்வி, கீதா, காசிநாகதுரை - ஆறு பேரின் அளப்பரிய தியாக உணர்வைப் பாராட்டும் அதே வேளையில், உங்களது போராட்ட நோக்கத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து விட்டீர்கள். எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களது உள்ள உறுதியைக் கொண்டு மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

‘இரட்டைமலை சீனிவாசன் நினைவை போற்றுவோம்’
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகப் போராளியாகவும், அரசியல் ஆளுமையுமாகவும் செயல்பட்ட ஈடு இணையற்ற பெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்ததும் அஞ்சல் தலை வெளியிட முயற்சி எடுத்ததும் திமுக அரசே ஆகும். ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்காக இறுதிவரை போராடிய சமூக வழக்கறிஞரான இரட்டைமலையாரின் நினைவைப் போற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : death ,election ,MK Stalin , Need to abandon the struggle to the death against the election and carry on the struggle to mobilize the people's power: MK Stalin's request
× RELATED ஒப்பாரி போராட்டம்