×

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி உத்தரவு: இனி கவனமாக பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

சென்னை : நீதிமன்றத்தை விமர்சித்து புகாரில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு பிரச்சனையில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, நீதிமன்ற அவமதிப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக விளக்கம் கொடுத்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என்று கூறினார்.

அரசு வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்ப்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொளி காட்சி வாயிலாக 42,233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம்  அளித்துள்ள பேச்சு சுதந்திரம்  நியாயமான விமர்சனத்தையும் உள்ளடக்கியது தான் என்று குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, நீதிமன்ற பணிகளை விமர்சிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.சுய ஒழுக்கம் மற்றும் கல்விச் சேவையில் பெயர் பெற்று விளங்கும் சூர்யா, நீதிமன்றத்தை கேலி செய்வது சரியா என்று யோசித்து இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Chief Justice ,Surya: Instruction , Actor Surya, contempt of court, Chief Justice, order, instruction
× RELATED அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்றம் 10...