×

கொடிகட்டி பறக்கும் திருட்டு மணல் வியாபாரம்: நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைப்பகுதிகளில் உற்பத்தியாகி குலசேகரம், திருவட்டார், குழித்துறை  பகுதிகள் வழியாக ஓடி தேங்காய்பட்டணம் கடலில் கலக்கும் ஆறு தான் தாமிரபரணி. கடந்த பல வருடங்களுக்கு முன் ஆற்றில் மணல் திருடிய பெற்ற மாபியா கும்பல்களால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் பல அடி ஆழத்திற்கு மணல் தோண்டப்பட்டதால் சுமார் நூறு அடிகள் வரை ஆற்றின் ஆழம் மாறி ஆற்றின் நீரோட்டம் செயல் இழந்து விளை நிலங்கள் மற்றும் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி போனது.

இதனால் தேங்காய் பட்டணத்தில் உள்ள ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கடல் நீர் ஆறு வழியே பின்னோக்கி பாய்ந்து திருவட்டார் வரை ஆற்றுநீர் உப்பாகிப்போனது. மேலும் ஆற்றில் குளித்த பலர் மணல் மாபியாக்கள் தோண்டிய பள்ளங்களால் உருவான நீர் சுழலில் சிக்கி இறந்தனர். மேலும் மழைக்காலங்களில் பெரும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதுடன், பல்வேறு குடிநீர் கிணறுகளும் சாய்ந்தன. இந்நிலையில் தற்போது மேல்புறம் அருகே மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பன்னிமூலைப்பகுதியில் ஆற்று மணல் தோப்புக்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஆதாரத்துடன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை புகைப்படம் எடுத்து சென்றனர். ஆனால் மணல் கடத்தல் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து மணல் விற்பனை நடந்து வருகிறது. தற்போது உயர்நீதிமன்றம் ஆற்றில் மணல் திருடும் கும்பல் மீது காவல்துறை மற்றும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மார்த்தாண்டம் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி மணல் திருடும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். ஆற்றில் மணல் திருடி கடத்தும் கும்பல் மீதுநடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும். இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காக்க முடியும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.



Tags : Theft sand business, police
× RELATED திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!