×

கலவர பூமியாக மாறிய பெங்களூரு : முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதால் எம்.எல்.ஏ. வீடு சூறை; துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி; 110 பேர் கைது!!

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின்  உறவினர் இஸ்லாமிய மதகுருவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவரது வீடு சூறையாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி. இவரது உறவினர் நவீன என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்து ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென எம்.எல்.ஏ. வீடு மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டிருக்கின்றன.

சாலையில் இருந்த வாகனங்களும் தீக்கரையாக்கப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது.இதனிடையே சர்ச்சை கருத்தை பதிவிட்ட நவீன கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி காவல் நிலையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இவர்களைக் கலைக்கும் முயற்சியாக தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசுதல், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றைக் காவல்துறையினர் கையில் எடுத்தனர்.இதில் 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கலவர பூமியாக சுமார் 6 மணி நேரம் பெங்களூரு பதற்றத்தில் இருந்துள்ளது. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கே.ஜி ஹள்ளி, டிஜே ஹள்ளி பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். எதற்காகவும் வன்முறை போராட்டம் ஒரு தீர்வு அல்ல என்று கூறியுள்ள அவர், வன்முறையில் ஈடுபடுவோரை ஒடுக்க கூடுதலாக போலீசார் குவிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

Tags : Bangalore ,MLA ,shooting , Riot Land, Bangalore, Facebook, MLA House, robbery, arrest
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...