×

மறு உத்தரவு வரும் வரை ரயில் சேவை ரத்து தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து நீடிக்கும். அதே சமயம், தற்போது இயக்கப்படும் 230 சிறப்புகள் ரயில்கள் தொடர்ந்து ஓடும்’ என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், ரயில் சேவை ரத்து செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், அது தவறான செய்தி என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இன்றுடன் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மறுஉத்தரவு வரும் வரை அனைத்து வழக்கமான பயணிகள் ரயில், புறநகர் ரயில்களுக்கான ரத்து நீடிக்கும். அதே சமயம், தற்போது இயக்கப்படும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து ஓடும். மும்பையில் அம்மாநில அரசின் கோரிக்கைபடி, அரசு, சுகாதார பணியாளர்களுக்காக குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிப்படும். தேவைப்படும் பட்சத்தில் அதிகப்படியான சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜ்தானி வழித்தடத்தில் மே 12ம் தேதி முதல் இயக்கப்படும் 12 ரயில்களும், ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், பொது போக்குவரத்தை இப்போதைக்கு அனுமதிக்கக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே ரயில்களுக்கான தடை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு
நாடு முழுவதும் பயணிகள் ரயில் ரத்தால், இந்த நிதியாண்டில் ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயில்கள் தடை செய்யப்பட்டாலும், சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

Tags : Government , Re-order, cancellation of train service, to be continued, Federal Government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...