×

சூறாவளியால் வாழை சேதம்; அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம்: கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன், குள்ளப்பகவுண்டன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றால் வாழைமரங்கள் சேதமடைந்த விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இப்பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். ஜி.9 எனும் பச்சை வாழை, ஏத்தப் பழம் என்னும் நேந்திரம் போன்ற ரகங்கள் சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி, சுருளி அருவி செல்லும் பகுதிகளில் நூற்றுக்கும் மேலான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன. ஒரு மரத்தில் ஒரு தார் சுமார் 30 கிலோ வரை எடை கொண்டதாகும். வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் ஒடிந்தும், தரையில் சாய்ந்தும், வாழைத் தார்கள் மண்ணில் புதைந்தும், வாழை இலைகள் வீசிய காற்றால் கிழிந்தும் தொங்குகின்றன. இது பற்றி சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி முகுந்தன் என்பவர் கூறுகையில், மழையுடன் கலந்து பலத்த காற்று வீசி வருவதால் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் வாழை மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Government , Hurricane, banana damage
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே சூறைகாற்றுடன் பலத்த மழை