×

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 72 இடங்களில் அபாய எச்சரிக்கை

தேனி: தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 72 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, சுருளியாறு, கொட்டகுடிஆறு, வைகை நதி, வராகநதி, மஞ்சளாறு உட்பட அனைத்து ஆறுகளிலும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள 72 இடங்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 72 இடங்களையும் தீயணைப்புத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அவற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும், வாகனங்களை கழுவவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்தை கொண்டும், யாரும் ஆறுகளுக்கு செல்ல கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 72 இடங்கள் பகுதிகள் ஆற்றங்கரையை விட தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன.

இடைவிடாமல் மழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எந்த நேரமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். இப்பகுதிகளை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்’’ என்றனர்.


Tags : places ,floods ,Theni district ,rivers , Theni, heavy rains, flooding in rivers
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!