×

சென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்.!!!

சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த  2,750 டன் அமோனியம் நைட்ரேட் மர்மமாக  வெடித்து சிதறியது. இதில் கட்டிடங்கள் நொறுங்கி நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். 5 ஆயிரம் பேர்  மருத்துவமனையில் உள்ளனர். இதேபோல் சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டால் விபத்து  நடந்துவிடக்கூடாது என்ற அச்சம் சென்னை மக்களிடம் எழுந்தது. இதையடுத்து, அமோனியம் நைட்ரேட்  வைக்கப்பட்டிருந்த மணலி துறைமுக பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்,  தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 ஆய்வு முடிவில், 740 டன் அமோனியம் நைட்ரேட்டை  அப்புறப்படுத்துவது தொடர்பாக 3 நாட்களுக்குள் இ-டெண்டரை வெளியிட வேண்டும் என்று சுங்கத்துறைக்கு  மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து, துறைமுக குடோனில் வைக்கப்பட்டுள்ள 740 டன்  அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை அப்புறப்படுத்துவது தொடர்பான இ டெண்டரை சுங்கத்துறை நேற்று  வெளியிட்டது.

இந்நிலையில், 10 கன்டெய்னர்களை ஹைத்ராபாத் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதனையடுத்து, சென்னை அடுத்த மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் நாளை பாதுகாப்புடன் ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது. மணலியில் மொத்தம் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட், நாளை முதற்கட்டமாக 10 கன்டெய்னர்களில் பாதுகாப்புடன் ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படவுள்ளது. தொடர்ந்து, அமோனியம் நைட்ரேட்டை உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Hyderabad ,Chennai , Ammonium nitrate in Chennai sand to be transported to Hyderabad tomorrow: Security measures intensified. !!!
× RELATED மணல் கடத்தலை தடுக்கக் கோரும் வழக்கு...