×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளி,கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களும் தேர்வில்லாமலேயே தேர்ச்சி பெற்று விட்டதாகவும், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், காலாண்டு, அரையாண்டில் ஒரு பாடத்துக்கான தேர்வு எழுதாதவர்களுக்கு கூட தேர்ச்சி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு சில பாடங்கள் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் என குறிக்கப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள் மற்றும், பெற்றோர் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது உண்மையாக இருந்தால் ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : examination , 10th class, general examination results, quarterly, half yearly, pass
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்