×

கொரோனா ஒழிப்பில் அமெரிக்கா தோல்வி மேற்கத்திய நாடுகள் நமக்கு பெரிய பாடம்: இந்தியாவின் வெற்றி மக்கள் கையில் பிரபல மருத்துவ நிபுணர் சொல்கிறார்

ஐதராபாத்: கொரோனா ஒழிந்து விடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அதை வெற்றி கொள்ள முடியும். அதற்கு, நமக்கு மேற்கத்திய நாடுகள்தான் சிறந்த பாடம். அமெரிக்கா கூட இந்த விஷயத்தில் தோற்று விட்டது என்கிறார் 30 ஆண்டுகள் மேல் அமெரிக்காவில் மருத்துவ துறையில் பிரபலமான மருத்துவ நிபுணர் தெலங்கானாவை சேர்ந்த குரு என்.ரெட்டி. கொரோனா - உலகில் சாதாரண மக்கள் முதல் மருத்துவ உலகம் வரை எல்லோரையும் உலுக்கி விட்டது. எப்படி வந்தது? எப்படி மனிதர்களை தாக்குகிறது? எவ்வளவு காலம் இருக்கும்? எப்படி உயிரை பறிக்கிறது? - இதுபோன்ற எல்லா கேள்விகளும் இன்னும் பெரும் புதிராகவே உள்ளன.

நேற்று கொரோனா வைரஸ் வீரியம், இன்று மாறிப் போகிறது; ஒரு நாட்டில் தாக்கிய அளவுக்கு இன்னொரு நாட்டில் இல்லை. இப்படி அதன் உருமாற்றம் மருத்துவ உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு மருந்து இல்லை; தற்காத்து கொள்வது தனி மனிதர்கள் கையில். அவர்களின் ஒழுக்க, கட்டுப்பாடுகளில் தான். இப்படியே நாமும் நான்கு மாதங்களை கடந்து விட்டோம்; குறைந்துவிடும் என்ற நம்பிக்கை பலரிடம் வந்து விட்டது; காரணம், இனியும் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு முடங்கி,வெறுத்து போய் விட்டனர் பலரும். கொரோனா குறைந்து விட்டதா? அடங்கி விட்டதா? என்ற கேள்விகளுக்கு ஆறுதல் பதில்கள் வரத் துவங்கி விட்டன. இதோ, அமெரிக்காவில் 30 ஆண்டுகள் பல பொறுப்புகள் வகித்த பிரபல மருத்துவ நிபுணர் தெலங்கானாவை சேர்ந்த குரு என். ரெட்டி பேட்டி:

* கொரோனா ஒழிப்பு என்பது இமாலய கேள்விக்குறி; ஆனால், அதை வெற்றி கொள்வதில் மேற்கத்திய நாடுகள் சாதித்து விட்டன. பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள்தான் நமக்கு சிறந்த பாடம். அதிலும், ஜெர்மனி போன்ற நாடுகள் இரண்டரை மாதங்களில் கொரோனாவை அடக்கி விட்டன.
* இந்த விஷயத்தில் நாம் அமெரிக்காவை பாடமாக எடுத்து கொள்ள முடியாது: காரணம், அங்கு அரசுகளும் சரி, மக்களும் சரி எல்லா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறி விட்டனர். ஆரம்பத்தில் கட்டவிழ்த்து விட்டதால்தான் பெரும் இழப்பு; பாதிப்பு. ஐரோப்பிய நாடுகளை விட உயிரிழப்பு அதிகம்.
* இந்தியா மார்ச் மாத இறுதிக்கு உள்ளாவது விழித்து கொண்டது. தொடர்ந்து, பொது ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகளை விதித்ததால் பெரும் பாதிப்புகள், இழப்புகளை குறைக்க முடிந்தது.
* ஜெர்மனி 7 கோடி மக்கள் தொகை கொண்டது; 9 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்தது: இரண்டரை மாதங்களில் தொடர் கட்டுப்பாடுகள். லாக் டவுன்களால் மீண்டது. இன்று மக்கள் திருப்தி.
* அடுத்து பிரிட்டன்; 6.5 கோடி மக்கள் தொகை; 45 ஆயிரம் பேர் பலி; அங்கும் 3 மாதங்களில் வெற்றி. இப்படி பல ஐரோப்பிய நாடுகள் இன்று மீண்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை நான்கு மாதங்களில் நிறைய கற்றுக் கொண்டு விட்டோம். கொரோனா குறைய ஆரம்பித்து விட்டதற்கான வெளிச்சக்கீற்று வரத் துவங்கி விட்டது. அடுத்த மாத மத்தியில் நமக்கு நிறைய நம்பிக்கை வந்துவிடும். ஆனால், எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம் கையில்தான். அதை மக்கள் மறந்து விடக்கூடாது. இவ்வாறு ரெட்டி கூறியுள்ளார்.

செப்டம்பர் நம்பிக்கை
* பல நாடுகளில் அதிகப்பட்சம் 7 மாதங்கள் நீடித்தது பாதிப்பு.
* இந்தியா 5 மாதங்களை நெருங்குகிறது.
* ஊரடங்கு, விதிகளால் பாதிப்பு குறைப்பு.
* செப்டம்பரில் குறைய ஆரம்பிக்கும் என நிபுணர்கள் ஒட்டு மொத்த கருத்து.

Tags : expert ,nations ,India ,US ,Western , eradication of the corona, defeat United States, the Western nations, great lesson, the victory of India, hands of the people, medical expert
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்