×

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

டெல்லி: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான புதிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது. நடப்பாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேலுமுறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

இந்த வழக்கை பொறுத்தவரையில் மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி சில மருத்துவர்கள் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அமர்வு, மருத்துவ மேற்படிப்புக்களில் அகில இந்திய ஓ.பி.சி. பிரிவினருக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மூன்று மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசோ அல்லது  இந்திய மருத்துவ கவுன்சிலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தங்களின் வாதங்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் டி.டி.எஸ். இளங்கோவன் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் தமிழக அரசு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Government of Tamil Nadu ,Supreme Court ,Government ,Tamil Nadu , Government of Tamil Nadu , Supreme Court,50% reservation , backward classes , medical studies,
× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ...