×

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு முடிவு

சென்னை:  தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை -2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து  வருகின்றனர். இதற்கிடையே, புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும்  உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது.

அதேபோல் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைப்பது என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.


Tags : Committee ,academics ,Government of Tamil Nadu , National Education Policy, Features, Committee, Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...