×

ராஜஸ்தானில் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பைலட் உட்பட 19 எம்எல்ஏக்கு நோட்டீஸ்: பதவியை பறிக்க சபாநாயகர் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: கட்சி கொறடா உத்தரவை மீறியதால், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உட்பட அவரது ஆதரவாளர்களான 19 எம்எல்ஏ.க்களை தகுதி செய்வதற்கான நோட்டீசை அனுப்பி சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நோட்டீசுக்கு பதிலளிக்க நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இந்த உட்கட்சி பூசலை பயன்படுத்தி பாஜ, அதிருப்தி எம்எல்ஏக்களை வளைக்க குதிரைப்பேரம் நடத்துவதாக கெலாட் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மாநில போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டார்.

கட்சி தலைமை சமரசம் செய்தும் சச்சின் பைலட் சமாதானம் அடையவில்லை. திங்கள் மற்றும் செவ்வாய் அன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென்ற கட்சி கொறடாவின் உத்தரவையும் புறக்கணித்தனர். இதனால், துணை முதல்வர் பதவியிலிருந்து, மாநில கட்சி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள காங்கிரசின் ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி கொறடா உத்தரவை மதிக்காத சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தரப்பில் சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் மனு தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் ஏன் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். பதிலளிக்க நாளை வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே அளித்த பேட்டியில், ‘‘நோட்டீசுக்கு அவர்கள் தரும் பதிலை பொறுத்து சபாநாயகர் முடிவெடுப்பார். அதோடு மாநில காங்கிரஸ் கமிட்டி முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் கோவிந்த் சிங் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்படும். எனவே இனி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் புதிய தலைவரிடம் அனுமதி பெற்றுதான் மீடியாக்களில் பேட்டி தரவும் உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

* பாஜவில் சேர மாட்டேன்
பதவி பறிக்கப்பட்டதால் சச்சின் பைலட் பாஜவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாஜவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளேன். ஆனால் சிலர் எரியும் தீயில் எண்ணெய்யை விட்டு குளிர்காய்கின்றனர். பாஜவுக்கு தாவுவதாக கூறி என் இமேஜை கெடுக்கப் பார்க்கின்றனர்’’ என்றார். அப்படியெனில் காங்கிரசில் தான் இருக்கிறேன் என்பதை சச்சின் பைலட் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வலியுறுத்தி உள்ளார்.

* குதிரை பேரத்தில் ஈடுபட்ட சச்சின்
முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘பாஜவுடன் குதிரைப் பேரத்தில் சச்சின் பைலட் நேரடியாகவே ஈடுபட்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் எங்களை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். எப்போது பதவி தர வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். இளம் தலைவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

* கதவுகள் இன்னும் திறந்தே இருக்கிறது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க சச்சின் பைலட் கடுமையாக உழைத்ததை மறுக்க முடியாது. அவர் பாஜவில் சேர மாட்டார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார். அவருக்காகவும் மற்றவர்களுக்காகவும் காங்கிரஸ் கதவுகள் திறந்தே இருக்கின்றன. சச்சின் தனது தவறை உணர வேண்டும். பாஜ பொறியில் சிக்காமல் அவர் திரும்பி வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை,’’ என்றார்.

Tags : pilot ,Speaker ,Golat ,Rajasthan , Rajasthan Golat, Against, Flag Flag, Pilot, 19 MLAs, Notice, Deprivation, Speaker's Action
× RELATED சச்சின் பைலட், 18 எம்எல்ஏ.க்கள் மீது...