×

கொரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் தாமதம் பாசிட்டிவா, நெகட்டிவா என தெரியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகும் பொதுமக்கள்

* பல மாவட்டங்களில் படுக்கை இல்லை
* காற்றோட்டம், கழிவறை வசதிகள் இல்லாத பரிதாபம்
* நோய் தொற்றைவிட கொடுமை என குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதப்படுத்துவதால், ரிசல்ட் என்ன என்பது தெரியாமல் பல நாட்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை வசதி இல்லாத அறைகளில் பல நாட்கள் அடைக்கப்படும் அவலம் நடந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில்  கொரோனா பரிசோதனை என்பது ஆரம்ப காலங்களில் 24 மணி நேரத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டது.

அதாவது, பாசிட்டிவாக இருந்தால் உடனடியாக போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். நெகட்டிவாக இருந்தால் அடுத்த சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் ஓரளவு மக்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு நிம்மதியடைந்தனர். தற்போது சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை முடிவுகள் என்பது இரண்டு முதல் 5 நாட்கள் வரை தாமதமாக அறிவிப்பதாக சுகாதாரத் துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் செய்வது, சம்பந்தப்பட்ட நபர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அதோடு அவர்கள் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் தவியாய் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமாக 95 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 49 பரிசோதனை மையங்கள் அரசு சார்பிலும், 46 பரிசோதனை மையங்கள் தனியார் சார்பிலும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் 3 ஷிப்ட் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறுகிறது. ஆனால் அந்த அளவுக்கு பரிசோதனை முடிவுகள் வெளி வருவதில்லை என்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

சென்னையில் பாசிட்டிவ் என்றால் மட்டுமே இரண்டு, மூன்று நாட்களில் முடிவு தெரிகிறது. அதுவும் அவர்களாக தெரிவிக்கின்றனர். ஆனால் நெகட்டிவ் வந்தால் அவர்களுக்கு முடிவுகள் தெரிய 5 நாட்கள் வரை ஆகிறது. அவர்களுக்கான முடிவுகளை தெரிவிப்பதில் ஏன் இந்த தாமதம் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. எப்படி பாசிட்டிவ் முடிவுகளை தெரிவிக்கிறார்களோ அதேபோன்று நெகட்டிவ் முடிவுகளை அறிவித்தாக வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பலர் கொரோனாவில் இருந்து தப்பும் வகையில் இடம் பெயர்ந்தனர். அங்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவு வரும் வரை அடிப்படை வசதி இல்லாத ஏதாவது ஒரு பள்ளி அல்லது கல்லூரிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு எந்த வசதியும் இருக்காது. திரைப்படங்களில் காட்டப்படும் பாழடைந்த பங்களாக்களில் தங்கியிருப்பது போன்று இரண்டு, மூன்று நாட்களை கழிக்க வேண்டும். எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் பலர் இதுபோன்ற பிரச்னைகளை தாங்கிக் கொண்டு இருக்கின்றனர். இ-பாஸ் கிடைப்பதில் படாதபாடு பட வேண்டும் என்றால், பரிசோதனை முடிவுக்கும் அதே தவிப்புக்குள்ளாக வேண்டிய நிலை தான் உள்ளது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முடிவுகள் வந்து விடுகிறது. ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது 4, 5 நாட்கள் வரை ஆகிறது. அதுவரை அந்த பாழடைந்த அறைகளில் தங்கியிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு பரிசோதனை முடிவு வந்துவிட்டதா என தவியாய் தவிக்கின்றனர். காரணம் படுக்கை, மின்விசிறி, கழிவறை வசதிகளும் சரியாக இல்லை. அதுமட்டுமல்ல நாட்கள் இழுத்துக்கொண்டே செல்வதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில், இதற்கு சென்னையிலேயே இருந்து சமாளித்திருக்கலாமோ, போற உசுறு அங்கேயே போயிருக்கலாம் என்றெல்லாம் யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : corona test ,public , Corona, test results, delay in notification, positive, negative, stress, general
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...