×

மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை நெஞ்சை பதற வைக்கிறது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது என்று மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலப்பணியில் ஈடுபட்டிருந்த திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை செய்யப்பட்டிருப்பது நம் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலட்சியமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவை சேர்ந்த பரமகுரு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். தனது ஊராட்சியில் போடப்படும் சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது. ஈவுஇரக்கமற்ற இந்த வன்முறைச் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தினருக்கும் என் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் ஆணிவேர்களாக திகழ்பவை உள்ளாட்சி அமைப்புகளே. அவற்றின் அதிகாரங்களை மட்டுப்படுத்த நினைப்பதும், குறிப்பாக திமுகவினர் வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காமல் தவிர்ப்பதும் அதிமுக அரசின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில்தான், தனது ஊராட்சியில் முறையாகப் பணிகள் நடைபெறுகிறதா என பார்வையிட சென்ற திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்த கும்பலைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஊராட்சிகளில் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். பரமகுருவின் படுகொலைக்கு நீதி கிடைக்கத் துணை நிற்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் தி.மு.கழகம் என்றென்றும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு  அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Tags : panchayat leader ,MK Stalin ,DMK , People's work, DMK panchayat leader, assassination, MK Stalin, strongly condemned
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...