×

முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவு குறித்து தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி 4,200க்கும் மேற்பட்டோர் சராசரியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் கடந்த வாரம் வரை தினசரி 2 ஆயிரமாக இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 1,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதேநேரம் சென்னை தவிர பல மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் அலுவலக தனி செயலாளர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

மேலும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையொட்டி முதல்வர் எடப்பாடியும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்து, தனக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே தலைமை செயலகம் வந்து பணிகளை தொடர்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று சுகாதார துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை (பிசிஆர்) செய்தனர். அதன் முடிவு நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. அதில், முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழகம் முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் எடப்பாடிக்கு முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கடந்த ஜூலை 13ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* முதல்வர் 3 நாள் சுற்றுப்பயணம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் 3 நாள் வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சென்று அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, அரசு நல திட்ட பணிகளையும் பார்வையிடுகிறார். நாளை சேலம் செல்லும் முதல்வர், 17ம் தேதி ஈரோடு மாவட்டம் சென்று, அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளி இரவு அல்லது சனிக்கிழமை சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chief Minister ,Government of Tamil Nadu ,Edappadi , Chief Minister Edappadi, Corona, No, Test Results, Government of Tamil Nadu, Information
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...