×

கொரோனா நிதிநெருக்கடி எதிரொலி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு பிரம்மோற்சவ ஊக்கத்தொகை நிறுத்தம்?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 450க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்படுகிறது. 9 நாட்கள் நடக்கக்கூடிய பிரம்மோற்சவத்தில் மூலவர் தரிசனம், வாகன சேவையை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஊழியர்கள் மூலம் சிறப்பாக செய்யப்படுகிறது. இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பிரம்மோற்சவ ஊக்கத்தொகையாக 1990ம் ஆண்டு முதல் பிரம்மோற்சவ பகுமானம் என்ற பெயரில் ரூ500 முதல் ரூ1000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பின்னர் 2018ம் ஆண்டு நிரந்தர ஊழியர்களுக்கு ரூ13,500, ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ6,500 வழங்கப்பட்டது.

கடந்தாண்டு நடந்த பிரம்மோற்சவத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ14,000, ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ7,000 வழங்க அரசுக்கு அறங்காவலர் குழு பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை அரசிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. இந்தாண்டு ஊரடங்கு காரணமாக ஊக்கத்தொகை வழங்க ரூ20.5 கோடி தேவைப்படுகிறது.  கடந்த 4 மாதங்களாக தேவஸ்தானத்திற்கு ரூ800 கோடி செலவானது. எனவே கொரோனாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘தேவஸ்தானத்தில் 7,800 நிரந்தர பணியாளர்களும், 14,500 ஒப்பந்த பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பிரம்மோற்சவ ஊக்கத்தொகை வழங்குவது குறித்து இம்மாத இறுதியில் நடக்கக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தனர்.

Tags : Tirupati Devasthanam Employees ,Corona Financial Crisis Echo: Promotional Incentive Stop , Corona Financial Crisis, Tirupati Devasthanam Employee, Prom Incentive, Stop?
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...