×

கொல்கத்தாவில் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆட்சியர் தேவதத்தா ராய் உயிரிழப்பு

கொல்கத்தா: கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய மேற்குவங்க துணை ஆட்சியர் தேவதத்தா ராய் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சந்தன்நகர் கோட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் 38 வயதாகும் தேவதத்தா ராய். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஹூக்ளிக்கு அழைத்து வருவது மற்றும் அவர்கள் வந்த பின் தங்குவதற்கான முகாம்களை அமைப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். கடினமான சூழ்நிலையை அவர் மனிதாபிமானத்தோடு கையாண்டதாக பாராட்டப்பட்டார்.

இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் வடக்கு கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் மோசமடைந்து சுவாச தடை ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கொரோனா தொற்றினால் தேவதத்தா ராய் உயிரிழந்தார். மறைந்த துணை ஆட்சியருக்கு, கணவர், நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.

கொரோனா பணிகளில் ஈடுபட்டிருந்த இளம் வயது துணை ஆட்சியர் இறந்தது சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதத்தா ராயின் மரணம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வங்க மக்களுக்காக அவர் செய்த தியாகத்திற்கு மேற்கு வங்க அரசு சார்பாக வணக்கம் செலுத்துகிறேன். அவரது கணவரை தொடர்பு கொண்டு பேசி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்திற்கு பலத்தை வழங்குமாறும் இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.



Tags : Devadatta Roy ,Kolkata ,Corona , Corona, Devadatta Roy
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...