×

சென்ட்ரலில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி இன்று முதல் 25ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் நடைபெற இருப்பதால் இன்று (11ம் தேதி) முதல் 25ம் தேதி வரை அப்பகுதியில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக ஈவெரா சாலை வருபவர்கள், தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையம் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.
* முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள், முத்துசாமி சாலை வழியாக முத்துசாமி பாலம் - வாலாஜா சந்திப்பு சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
* ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் ஈவினிங் பஜார் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி ஈவெரா சாலை சென்று, வலதுபுறம் திரும்பி முத்துசாமி பாலம் - வாலாஜா சந்திப்பு சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
* ஈவினிங் பஜார் சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல இயலாது.
*  வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் இடதுபுறம்  திரும்பி ஈவெரா சாலை சென்று, வலது பக்கம் திரும்பி, முத்துசாமி பாலம் வழியாக வாலாஜா சந்திப்பு சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
* சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல இயலாது.
* முத்துசாமி சாலையிலிருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.
இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : rail tunnel work ,Traffic change ,Central , Central Metro Rail, Subway, Traffic Change, Traffic Police
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!