×

கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவிற்கு திமுக கண்டனம்

சென்னை: கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அதிமுக அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் குழாய் மூலம் மார்ச் 2024-க்குள் குடிநீர் வழங்க வேண்டும் என்ற ஜல் சக்தி மிஷன் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 2,264.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விட வேண்டும் என்று நினைப்பது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.

குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைச் சார்ந்தது. திமுக சார்பில் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாதாடி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற்று முடிந்து, இன்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். ஊராட்சி மன்றங்கள், கட்சி சார்பற்ற தேர்தல் என்றாலும், திமுகவினர் மட்டுமின்றி, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் மாவட்ட அளவில் டெண்டர் விட்டு- உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து- ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயல். ஆகவே 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 வீடுகளுக்கு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திமுக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.Tags : DMK ,district ,areas ,Stalin , Drinking water, Stalin
× RELATED தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க திமுக பாடுபடும்: மு.க.ஸ்டாலின் உறுதி