×

சாத்தான்குளம் போலீஸ் மீது மேலும் ஒரு கொலை வழக்கு.: எனது மகனை அடித்து கொன்றதாக தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மதுரை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வடிவு என்பவர் இன்று புதிதாக ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது; நான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன். கடந்த மே மாதம் நடந்த ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக சாத்தன்குளத்தின் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் எனது வீட்டிற்கு வந்தனர்.

அப்போது எனது மூத்த மகன் துறை என்பவர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். எனவே மூத்த மகன் துறையை விசாரணை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அப்போது எனது மூத்த மகன் வீட்டில் இல்லாததால் மே 23-ம் தேதி எனது இரண்டாவது மகன் மகேந்திரனை விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவே காவல் நிலையத்துக்கு வரமுடியாது என்று, எனது இரண்டாவது மகன் மகேந்திரன் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

அதனையடுத்து காவலர்கள் எனது இரண்டாவது மகனை அடித்து அவர்களது வாகனத்தில் அழைத்து சென்றனர். அதன் பின்னர் இரண்டு நாட்கள் எந்த வித தகவலும் எங்களுக்கு தெரிவிக்காமல் எனது இரண்டாவது மகனை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து அடித்தனர். பின்னர் மகேந்திரன் விடுவிக்கப்பட்டார். அப்போது அவரின் உடலில் உடம்பில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. அப்போது இதுதொடர்பாக யாரிடமும் புகார் அளிக்கக்கூடாது என்று ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் என்னை மிரட்டினார்கள்.  

அதனையடுத்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட எனது இரண்டாவது மகனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போது மருத்துவர்கள் மகேந்திரனை சோதித்து தலையில் பலத்த காயம் உள்ளதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி ஜூன் 13-ம் தேதி எனது இரண்டாவது மகன் உயிரிழந்துவிட்டார்.

இது தொடர்பாக நான் பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து இருந்தேன். அனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தந்தை மற்றும் மகனை அடித்து கொன்ற காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் எனது மகனின் வழக்கையும் விசாரிக்க வேண்டும் . மேலும் எந்த வழக்கை சிறப்பு குழு வைத்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் தாயார் வடிவு கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sathankulam ,court ,Mother lodges court , murder ,case ,Sathankulam ,police, lodges, court
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு.: காவலர் முருகன் ஜாமின் மனு தள்ளுபடி