×

தேர்தலில் வெற்றி பெறும் எந்திரம் அல்ல மாற்றத்திற்கான சேவைக்கானது பாஜ: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘பாஜ தேர்தலில் வெற்றி பெறுவதற்கான இயந்திரம் மட்டுமல்ல; மக்களுக்காக, சமுதாயத்திற்காக, நாட்டிற்காக  மாற்றத்தைக் கொண்டு வரும் சேவைக்கானது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி கட்சி தொண்டர்களுக்கு காணொலி மூலம் நேற்று உரையாற்றினார். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசியல் விமர்சகர்கள் தேர்தலை அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் பாஜ. தேர்தலில் வெற்றி பெறும் எந்திரம் அல்ல; மாறாக மக்களுக்காக, சமுதாயத்திற்காக, நாட்டிற்காக மாற்றத்தை கொண்டு வரும் சேவைக்கானது.மக்களின் ஆசிர்வாதம் கடவுளின் ஆசிர்வாதத்தை போன்றது. மக்கள் அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள். மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாம் அதனை நிறைவேற்றுகிறோம். நெருக்கடி கால கட்டத்தில் அவர்கள் நம்மை நம்புகின்றனர் என்பதை புரிந்து கொள்கிறோம்.  

ஊரடங்கின் போது, நமது கட்சி தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி லட்சகணக்கான மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளனர். பெரும்பாலான தொண்டர்கள் ஏழைகளை தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து உதவினர். ஆனால் இவர்கள் ஆற்றிய பணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்யிலும், நெருக்கடி காலத்தில் கட்சித் தொண்டர்கள் ஆற்றிய பணி பாஜ ஆக்கப்பூர்வ பங்காற்ற முடியும் என்பதை நிருபித்துள்ளது. அதே போல், பீகாரிலும் பாஜ தொண்டர்கள் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. கிழக்கு இந்தியாவில் நிலவும் அதிக வறுமை காரணமாக அங்கு கொரோனா அதிகமாக பரவும் என்று நினைத்ததை மக்கள் தவறு என்று நிருபித்துள்ளனர். மகாராஷ்டிரா தொண்டர்களும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தற்சார்பு இந்தியாவுக்கான ஆப்கள் உருவாக்க அழைப்பு
சீனாவின் 59 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மொபைல் ஆப்களை உருவாக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இடையூறுகளை சமாளிக்க தகவல் தொழில்நுட்பம் நமக்கு உதவி உள்ளது. ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத் தரம் வாய்ந்த செயலிகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக, தற்சார்பு இந்தியாவுக்கான புதிய ஆப்களை உருவாக்கும் சவால் தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற செயலிகளை உருவாக்கும் தொலைநோக்கு, திறமை உங்களிடம் இருப்பதாக கருதினால், இது உங்களுக்கான சவாலாகும்‘‘ என்று கூறினார்.

Tags : BJP ,election ,Narendra Modi , Election victory, BJP, PM Modi
× RELATED மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின்...