×

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிடையாது வீட்டில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளில் மாற்றம்

புதுடெல்லி: கொரோனா பாதித்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பிற இணை நோய் இருப்பவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளில் மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் யார் யார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம், யாருக்கு இந்த வசதி கிடையாது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:
* எச்ஐவி பாதித்தவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் கிடையாது.
* அதே போல், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீர பாதிப்பு உள்ளவர்களை மருத்துவ அதிகாரிகள் பரிசோதித்து ஒப்புதல் தந்த பிறகே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவர்.
* காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இல்லாதவர்கள், லேசான மற்றும் மிதமான அறிகுறி உள்ளவர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்தால் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* நாள் முழுவதும் கவனிக்க வேண்டும்
வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களை கவனித்துக் கொள்பவர்கள் 24 மணி நேரமும் உடனிருக்க வேண்டும். பாதித்தவரின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு அவர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

* 10 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ்
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லையெனில், அடுத்த 7 நாட்கள் தனியாக இருந்து, தங்களின் உடல் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

Tags : 60 years old, no home, homelessness, norm, change
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...