×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் சாவு: பாதிப்பு எண்ணிக்கை 6139 ஆக உயர்ந்தது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் இறந்தனர். 303 பேருக்கு கொரோனா உறுதியானது. 11 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 6139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3150 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 106 பேர் சிகிச்சை பலனின்றி இருந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர் இதில் நேற்று ஒரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில், பம்பல் நகராட்சியில் 23 வயது இளம்பெண், 23 வயது வாலிபர் உள்பட 3 பேர், பல்லாவரம் நகராட்சியில் ஒரு ஆண், காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர், மறைமலை நகரை சேர்ந்த 3பேர், மதுராந்தகம், மாமல்லபுரத்தை சேர்ந்த தலா ஒருவர்  என நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 11பேர் இறந்தனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று குறையவில்லை. இறப்பும் எண்ணிக்கையும் குறையவில்லை. போலீஸ், நகராட்சி ஆணையர், அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள் என பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. வயதானவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் என எண்ணியவர்கள் மத்தியில், இளம் வயதினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர். திருக்கழுக்கன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மந்தைவெளி தெருவில் 29 வயது வாலிபர், பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

அவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்தது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று அந்த பரிசோதனை முடிவில், இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. உடனே, அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல், திருக்கழுக்குன்றம் தாலுகா சதுரங்கப்பட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவருக்கும், புதுப்பட்டினம், நெய்குப்பி, அம்மணம்பாக்கம், பட்டிக்காடு, நரப்பாக்கம், மோசிவாக்கம், மணமை, புல்லேரி, இரும்புலிச்சேரி ஆகிய கிராமங்களில் நேற்று மட்டும் மொத்தம் 21 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது.

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தாசில்தார் தங்கராஜ் தலைமையில் நடந்தது. திருக்கழக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) லதா, சதுரங்கப்பட்டினம், மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார மைய தலைமை மருத்துவர் கவிதா, இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்யும்படி கூற வேண்டும். பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்குவதற்கு, இடைவெளி வட்டங்கள் வரைய வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக் ரகுநாத், திருக்கழுக்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் உள்பட பலர் கலந்துக் கொண்டார்.


* பொதுமக்கள் தயக்கம்
மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாதாரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரசவம், விபத்து உள்பட பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் இறந்துள்ளனர். அப்போது, பிரேத பரிசோதனை முடிக்கும் முன்பே, உறவினர்கள் சடலங்களை கேட்டு தகராறு செய்வார்கள். இதையொ–்டி டீன் அலுவலகம், ஆர்எம்ஓ அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிடுவார்கள். சில சமயங்களில் சாலை மறியலும் நடந்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல உறவினர்கள் தயங்குகின்றனர். இதனால், சவ கிடங்கில், சடலங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

* நகர கூட்டுறவு வங்கி மூடல்
திருப்போரூர் பேரூராட்சியில் நேற்று ஒரே நாளில் கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், திருப்போரூர் நகர தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால், வங்கியில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். இதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் நேற்று கேளம்பாக்கம், பையனூர், பெருந்தண்டலம், ஒரகடம் ஆகிய கிராமங்களில் மொத்தம் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Tags : district ,Chengalpattu , Chengalpattu district, overnight, coronavirus death, 11 killed, 6139 affected
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா