×

இந்தாண்டு இப்படிதான் வீட்டிலேயே யோகா... குடும்பத்தோடு யோகா: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தாண்டு சர்வதேச யோகா தினம், டிஜிட்டல் தளங்கள் மூலமாக கொண்டாடப்படும்,’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தாண்டு சர்வதேச யோகா தினம் டிஜிட்டல் தளங்கள் மூலமாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘வீட்டிலேயே யோகா... குடும்பத்துடன் யோகா’ என்பது இந்தாண்டு தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தபடியே மக்கள் யோகா நிகழ்ச்சியில் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கலாம். இதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் டிஜிட்டல் தளங்கள் மூலமாக மக்களை சென்றடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

லே பிரமாண்ட நிகழ்ச்சி ரத்து
இந்தாண்டு யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீரின் லே பகுதியில் மிக பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியை நடத்த, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். ஆனால், கொரோனா காரணமாக இது ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : family home ,Announcement ,Yoga Yoga: Federal Government , Yoga, central government
× RELATED செங்கம் அருகே குடும்பத்தகராறில் 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை?