×

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊரில் சேர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 15 நாள் அவகாசம்: உச்ச நீதிமன்றம் பரிசீலனை

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் தவிக்கும்  வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க,  உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என தெரிகிறது.வட மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள், பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் இவர்கள் வேலையை இழந்து்ம், சொந்த ஊருக்கும் போக முடியாமலும், சாப்பாட்டுக்கு வழியின்றியும் தவிக்கின்றனர். இவர்களில்  பலர் கால்நடையாகவும்,  லாரி உள்ளிட்ட வாகனங்களிலும்,  மத்திய - மாநில அரசுகள் இயக்கி வரும் ஷராமிக் சிறப்பு ரயில்கள், பஸ்கள் மூலமாகவும் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இந்த பயணங்களின் போது, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு விபத்துகளில் பலியாகினர்.  இவர்களின் அவலநிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே.கவுல் மற்றும் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து வருகிறது. இந்த அமர்வு கடந்த மாதம் 28ம் தேதி, ‘வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள், பஸ்களில் அழைத்துச் செல்ல டிக்கெட் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கடந்த 3ம் தேதி வரையில் 4,200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கோடி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இன்னும் எவ்வளவு தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களில் தவிக்கின்றனர், அவர்களை அழைத்துச் செல்ல எத்தனை ரயில்கள் தேவைப்படும் என்பதை மாநில அரசுகள் தெரிவித்தால், அதற்கு ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், ‘வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கலாம் என இந்த அமர்வு பரிசீலித்து வருகிறது. இது பற்றி வரும் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என்று தெரிவித்தனர்.

Tags : state governments ,state workers ,Supreme Court , Central , state governments,15 days more time,recruit foreign state workers, Supreme Court review
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...