×

கொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு: கொரோனா ஊரடங்கால் ஈரோட்டில் மாட்டுச்சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 13 வாரமாக சந்தை நடைபெறாததால் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, கரூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் வருவார்கள். மாடுகளை வாங்கி செல்வதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வார்கள். வாரந்தோறும் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடியில் இருந்து ரூ.3.50 கோடிக்கு மாடுகள் விற்பனை இருக்கும்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. அதன்படி, ஈரோட்டில் மாட்டுச்சந்தை செயல்பட கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 13 வாரமாக மாட்டுச்சந்தை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டது தொடர்கிறது. இதனால், சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோடைகாலங்களில் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு மற்றும் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றால் மாடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு தடையால் ஒட்டுமொத்தமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், `கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் 13 வாரமாக மாட்டுச்சந்தை நடைபெறவில்லை. ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரித்து மண்டலமாக அறிவித்து அதற்கேற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மாட்டுச்சந்தையை பொருத்தவரை வெளிமாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வந்தால்தான் வியாபாரம் நன்றாக இருக்கும். வாகன போக்குவரத்தும் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மாடுகளை சந்தைக்கும் கொண்டு வர முடியாது. தொடர்ந்து நீடித்து வரும் மாட்டுச்சந்தை தடையால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்’ என்றனர்.

Tags : Rs.40 crores, trade affected, coronation ban
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...