×

லாப நோக்கில் கணக்கீடு மின் கட்டணம் 10 மடங்கு உயர்வு: மக்கள் கடும் கண்டனம்

சென்னை: கொரோனா ஊரடங்கால் கையில் பணம் இல்லாத நிலையிலும் லாப நோக்கில் மின்நுகர்வு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள ஒவ்ெவாரு குடும்பத்தின் தலையிலும் மின் கட்டணம் 10 மடங்கு உயர்த்தி சுமத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை செலுத்த முடியாது என்பதால் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மின்வாரியத்துக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீடுகளுக்கான மின்நுகர்வு கணக்கெடுக்கப்படவில்லை. எனவே, அதற்கு முந்தைய மின்நுகர்வுக்கான கட்டணத்தையே செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்தது. மேலும் தொடர் ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்தவும் காலஅவகாசத்தை நீட்டித்து. இந்த ஜனவரி, பிப்ரவரி மாத காலகட்டத்தில் மின் கட்டணமானது 200 முதல் 500 வரை மட்டுமே பலருக்கு வந்தது. அதையே சிலர் ஆன்லைன் மூலம் கட்டினர். சிலர் காலஅவகாசத்தை பயன்படுத்தி கொண்டனர். ஆனால், வெயில் மாதமான மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏ.சி., மின்விசிறி ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்போது மின்நுகர்வும் அதிகமாக இருக்கும். அத்துடன் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் மக்கள் வேலையின்றி வீட்டில்தான் முடங்கினர். இதனால் குறைந்தது 15 முதல் 20 மணி நேரம் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு ஏ.சி., மூன்றுக்கும் மேற்பட்ட மின்விசிறி, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் சார்ஜர் என அனைத்தும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டு இருந்தது. இதனால் மின்சார யூனிட் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால், தமிழக அரசு மே மாதம் வரை பழைய யூனிட் கட்டினால் போதும் என்று அறிவித்துவிட்டு, ஜூன் மாதம் முதல் வீடுகளுக்கு சென்று புதிதாக கணக்கீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கணக்கீட்டின்போது, நான்கு மாத (பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல், மே) மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு அதற்கான மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. பிறகு முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் புதிய மின் கட்டண தொகை கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாத மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி கணக்கிட்டால், சாதாரண மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு மின்சார கட்டணமாக இந்த மாதம் ₹2 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வணிக நிறுவனங்களின் நிலை இதை பல மடங்கு. இது ஒருவகையில் மறைமுக கொள்ளை என்றுதான் நடிகர் பிரசன்னா கூட இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தார். இதற்கு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு மாதம் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கும்படி அரசு கூறியது. தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ₹1000 மட்டும் கொடுத்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த இரண்டு மாதத்தில் குறைந்தது ₹20 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லியது. இந்த உத்தரவை பல நிறுவனங்கள் மதிக்கவில்லை. அடுத்து, இஎம்ஐ 3 மாதம் பிடிக்க கூடாது என்று அரசு கூறியது. அதையும் எந்த வங்கியும் மதிக்கவில்லை. ஏதோ உத்தரவு போட்டுவிட்டால், எல்லாம் அதன்படி நடக்கிறது என்று மத்திய-மாநில அரசுகளும், அதிகாரிகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அறிவிப்பு எதுவும் செயல்பாட்டுக்கு வருவது இல்லை. இப்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் மிக அதிகளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக குடும்பத்தில் அனைவரும் வீட்டில் இருந்ததால் ஏ.சி., மின்விசிறி அதிகளவில் பயன்பாட்டில் இருந்ததால், மின்சார யூனிட் அதிகரித்துள்ளது. இதனால் மின் யூனிட் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்து, பல ஆயிரம் பணம் கூடுதலாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று கணக்கீட்டு சென்றுள்ளனர்.

தற்போது கடந்த 1ம் தேதியில் இருந்துதான் வெளியே சென்று வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம். ஆனாலும் பழைய நிலை வர இன்னும் பல மாதம் ஆகும். கையில் பணம் இல்லாமல் தவிக்கிறோம். குழந்தைகளுக்கு ஜூலை மாதம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி பிரச்னைகளில் இருக்கும்போது, தற்போது மின் கட்டணம் 4 மாதத்திற்கான கட்டணத்தை ஒரே மாதத்தில் கட்ட சொன்னால் எப்படி கட்ட முடியும்? தயவுசெய்து தமிழக அரசு மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். பழைய கட்டணத்தை கடந்த 2 மாதங்களில் கட்ட சொன்னதால் உண்மையில், இழப்பு எங்களுக்குதான். அரசுக்கு இதன்மூலம் அதிக வருவாய்தான் கிடைக்கும். ஏழை, நடுத்தர மக்கள் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து எங்கள் மேல் அதிக பாரத்தை அரசுகள் சுமத்த வேண்டாம் என்றனர்.

முகப்பேர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் ₹360 மட்டுமே மின் கட்டணம் செலுத்தினேன். தற்போது, இந்த மாதம் ₹3,800 ரூபாய் கட்ட வேண்டும் என்று பில் வந்துள்ளது. 10 மடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வளவு தொகையை என்னால் எப்படி கட்ட முடியும். கடந்த ஏப்ரல் மாதமே மின் யூனிட்டை கணக்கிட்டு இருந்தால் இவ்வளவு அதிக தொகை வந்திருக்காது” என்றார். பல்லாவரத்தை சேர்ந்த அரசு ஊழியர் பாக்யராஜ் கூறும்போது, “கடந்த முறை ₹6,862 மின் கட்டணம் கட்டினேன். தற்போது 2 மாதம் ஊரடங்கால் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது ₹19,600 கட்டும் நிலை உள்ளது” என்றார். கடந்த மாதம் 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்று திரும்பியவர்களுக்கும் மின் கட்டணம் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி, ஒவ்வொருவரும் பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக கட்ட வேண்டியுள்ளது.

Tags : Profit Calculation ,Increases ,Power Charges 10-fold:
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...