×

4 நாள் உணவு, தண்ணீரின்றி பயணித்ததால் பரிதாபம் முடிவில்லா பயணத்துக்கு சென்றுவிட்ட தாயை எழுப்ப முயற்சிக்கும் குழந்தை: மரத்துப்போன மனிதங்களுக்கு சாட்சி

‘‘பயணிகள் கனிவான கவனத்துக்கு... அகமதாபாத் செல்லும் தொழிலாளர் சிறப்பு ரயில் இன்னும் சற்று நேரத்தில் முதலாவது நடைமேடையில் வர உள்ளது’’பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் பெண் அறிவிப்பாளரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.இதைக்கேட்ட தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலை பிடிக்க பிளாட்பாரத்தில் ரயிலுக்கு நெருக்கமாக நிற்க ஆரம்பிக்கின்றனர்.இவ்வளவு பரபரப்புக்கு இடையே பிளாட்பாரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அசைவற்று படுத்துக் கிடக்கிறார். அவர் மீது ஒரு போர்வையும் போர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இது போன்ற ரயில் நிலையத்தில் கூட்டத்தை பார்த்து பழக்கப்பட்டு விட்ட அந்த குழந்தை, தாயை எழுப்புவதற்காக அவள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை விலக்குகிறது.

ஆனால், அந்த தாய் எழுவதாக இல்லை. தாய் எழுந்திருக்காததை பார்த்த குழந்தை, அவள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை தன் தலை மீது போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் விளையாடுகிறது. பின்னர் அதை தூக்கிப் போட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டி வரை, இன்னமும் முழுமையாக நடக்க வராத கால்களுடன் தள்ளாடி தள்ளாடி நடக்கிறது. பின்னர் மீண்டும் வந்து தாயை எழுப்ப முயற்சிக்கிறது. தாய் இறந்துப் போனது தெரியாமல், அவரை எழுப்ப அந்த குழந்தை  முயற்சிப்பதை பற்றி கவலைப்படாமல், ரயிலை பிடிக்க ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருப்பதும், சிறுவன் ஓடிக் கொண்டிருப்பதும் என இயந்திர கதியாக சில சம்பவங்களும் அங்கு நடக்கிறது.

தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்லக் கூட போதிய அவகாசம் அளிக்காமல் அவசர, அவசரமாக ஊரடங்கை அறிவித்தவர்களுக்கு இந்த பால்மனம் மாறாத குழந்தையின் சோகம் தெரியவா போகிறது? மனதை உருக்கும் இந்த வீடியோ காட்சியை, பீகார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவின் உதவியாளர் சஞ்சய் யாதவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த அந்த பெண் தொழிலாளி நான்கு நாட்களாக ரயிலில் தொடர்ந்து பிரயாணம் செய்துள்ளார். அவருக்கு குடிக்க உணவு, தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் இறந்ததாக ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வழக்கம்போல் அரசு தரப்பில் எதிர்மாறான கருத்து தானே சொல்லப்படும். இங்கும் அதேபோன்று முசாபர்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி ரமாகாந்த் உபாத்யாயா கூறுகையில், ‘‘இந்த சம்பவம் நடந்த தேதி மே 25ம் தேதி. சம்பந்தப்பட்ட பெண் முசாபர்பூரில் இருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு ரயிலில் செல்ல இருந்தார்.

ஆனால், ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவர் இறந்தார். அவருடன் அவரது தங்கை மற்றும் மைத்துனன் கூட வந்திருந்தனர்’’ என்று கூறினார். மேலும், டிஎஸ்பி முன்னிலையில், அந்த பெண்ணின் தங்கையும், மைத்துனரும் கூறுகையில், ‘‘இறந்த பெண்ணுக்கு கடந்த ஓராண்டாகவே மனநோய் மற்றும் அடையாளம் தெரியாத நோய் இருந்தது. ரயிலில் எங்களுக்கு உணவு, குடிநீர் எல்லாம் தரப்பட்டது. திடீரென அவர் இறந்து விட்டார். அவர் எதனால் இறந்தார் என்பதை டாக்டர்கள்தான் தெரிவிக்க வேண்டும். பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக மூடி வைத்திருந்தோம்,’’ என்றனர். தினம் தினம் தொழிலாளர்கள் பட்டு வரும் கஷ்டங்களுக்கு, இந்த சம்பவம் ஒரு துளி மட்டுமே.

Tags : Baby , 4 Day Food, Water, Corona, Curfew
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி