×

தாமதமாக சென்றடையும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்; பல ரயில் நிலைய ஸ்டால்களில் உணவு பொருட்கள் கொள்ளை: குடிநீர், பசியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவேசம்

புதுடெல்லி: தாமதமாக சென்றடையும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களால், பசி தாங்க முடியாமல் பல ரயில் நிலைய ஸ்டால்களில் உணவு பொருட்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் அள்ளிச் செல்வது அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் ஆகியோரை இந்திய ரயில்வே கடந்த 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்கிறது. இந்திய ரயில்வே வெளியிட்ட நேற்றைய புள்ளிவிபரப்படி மொத்தம் 3,060 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இயக்கப்பட்டன. 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊருக்குச் சென்றடைந்தனர்.

மொத்தமாக இயக்கப்பட்ட 3,060 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 2,608 ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. 453 ரயில்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதில் ரயில்வேயின் தவறான நிர்வாகத்தால், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் பல மணிநேர தாமதத்துக்கு பின், குறிப்பிட்ட ரயில் நிலையங்களை சென்றடைகிறது. இதனால், குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். கடுமையான வெப்பம் மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது. அதனால், நாடு முழுவதும் பல ரயில் நிலையங்களில் ஸ்டால்களில் இருக்கும் உணவு பொருட்களை அள்ளிச் செல்வது அதிகரித்து வருகிறது.

* நேற்று பல்காரில் இருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணித்த தொழிலாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட பசியால் பிரயாகராஜ் சிவ்கி ரயில்நிலைய சந்திப்பில் உள்ள உணவுகூடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவை அள்ளிச் சென்றனர். ஸ்டாலில் இருந்த உணவு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஒன்றாக புகுந்து உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

* கான்பூர் மத்திய நிலையத்தில் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து பெட்டியா (பீகார்) செல்லும் சிறப்பு ரயிலில் வந்தவர்கள் தண்ணீர் பாட்டில்களை கொள்ளையடித்தனர். கோடையில் வெப்பம் அதிகமாக இருந்ததால், குடிக்க தண்ணீர் கிடைக்காததால் கும்பலாக சென்று பாட்டில்களை ஸ்டால்களில் இருந்து அள்ளிச் சென்றனர். ரயில்வே பயணிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவு பொட்டலங்களும் ஊழியர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.

* சூரத்திலிருந்து மோதிஹாரி நோக்கி சென்ற சிறப்பு ரயில் ேநற்று கோடெர்மாவை அடைந்தது. இந்த ரயில், டெல்லி - ஹவுரா கிராண்ட் கார்டு பிரிவில் முகலசராய், கயா, கோடெர்மா, தன்பாத் மற்றும் அசன்சோல் வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த ரயில் 80 மணி நேரம் தாமதமாக சென்று கொண்டிருந்தது. அதனால், பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை. பொறுமை இழந்த ெதாழிலாளர்கள் ​​மாலை 4 மணியளவில் ரயில் பெட்டியில் இருந்து அவசர நிறுத்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உணவு மற்றும் தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்தனர். அதன்பின், அதிகாரிகள் உணவுக்கும், குடிநீருக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் அந்த ரயில் புறப்பட்டு சென்றது.

* பீகார் மாநிலத்திற்கான சிறப்பு ரயில் மொஹாலி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிட்டு இருந்தது. இதற்காக ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்ட நிர்வாகம் பதிவுப் பட்டியலின் அடிப்படையில் 377 தொழிலாளர்களை இந்த ரயிலில் இருந்து வெளியேற்றியது. அவர்கள் மண்டி கோபிந்த்கரிலிருந்து பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த ரயில் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. தொழிலாளர்கள் ஒரு பள்ளி மைதானத்தில் இரண்டு நாட்கள் தங்கினர். நேற்று காலை லிங்க் ரோட்டில் தங்களது ஊர்களுக்கு அழைத்துச் செல்லக் கோரி தொழிலாளர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். தொழிலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் கிடந்த செங்கல் மற்றும் கற்களை எடுத்து, அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது வீசினர். அதன்பின் நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

* ஆனந்த் விஹாரில் இருந்து பூர்ணியாவுக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில் ஒன்று, சில காரணங்களால் ரூட் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது. கயா ரயில் நிலையத்தில் இந்த ரயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ரயில் நிலையத்தில் வந்து இறங்குவதால் வைரஸ் பாதிப்பு பரிசோதனை நடத்தப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் கயாவில் நிறுத்த வேண்டிய ரயில், நெரிசலைத் தவிர்க்க டெஹ்ரி நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

* பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையம் அருகே நேற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில், பெல்ஹாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ ராம்தேவ் யாதவும் அங்கு சென்றார். அவரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரமாரியாக திட்டி தாக்கினர். அங்கிருந்து எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார். மேலும், எம்எல்ஏவின் மெய்க்காப்பாளர் வைத்திருந்த ரிவால்வரை பறித்தும், அவர்களின் வாகனத்தையும் தொழிலாளர்கள் சேதப்படுத்தினர். உள்ளூர் மக்கள் தலையிட்டு எம்எல்ஏவையும், அவரது மெய்க்காப்பாளைரையும் மீட்டு அனுப்பி வைத்தனர்.


Tags : Shramik ,migrant workers ,railway stalls , Shamika, special trains, food supplies, migrant workers
× RELATED வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு...