×

21 நாள் முடக்கத்துக்கு ஆதரவு: பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்: மருத்துவர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் வழங்க அறிவுரை

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பொது சுகாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கும்,  வாழ்வாதாரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தோற்கடிக்க, ஒன்றிணைந்து போராட இந்த நாடு தயாராக இருக்கிறது. இந்த  வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு,  காங்கிரஸ் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கும்.

இந்த சவாலான நேரத்தில் நாம் கட்சி பாகுபாடின்றி, நாட்டுக்காகவும், மனித நேயத்துக்காகவும் ஆற்றும் கடமையை நாம் ஒவ்வொருவரும் மதிக்க  வேண்டும். இந்த நோக்கத்தில், தங்களுக்கு நான் சில ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புகிறேன். மிகப் பெரிய சுகாதார பிரச்னையை தீர்க்க இது  உதவும் என நம்புகிறனே்.
* டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு சாதனங்கள், என்-95 முகமூடிகள், ஹஸ்மத் சூட் ஆகியவை  தேவை.
இந்த பொருட்களின் உற்பத்தியையும், சப்ளையையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் 6 மாத காலத்துக்கு ‘ரிஸ்க்  அலவன்ஸ்’ அறிவிக்க வேண்டும்.
* பல வர்த்தக நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்தி விட்டன. அதனால், சமூக பாதுகாப்பு  திட்டங்களை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
* சம்பளதாரர்கள், விவசாயிகள் உட்பட அனைவருக்கும், அனைத்து விதமான கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு  அளிக்க வேண்டும்.
* விவசாயி களின் அறுவடையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
* நியாய் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட குறைந்தப்பட்ச வருமான உத்திரவாத திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
* ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், பிரதமரின் கிஷான் திட்டத்தில் உள்ளவர்கள், முதியோர், விதவை, மாற்றுத் திறனாளி ஓய்வூதியம்  பெறுபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பில் உள்ளவர்களுக்கு ₹7,500 நேரடியாக செலுத்த வேண்டும்.
* ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கடையில் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும்.

ராகுல் காந்தி வரவேற்பு
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், வேலை இழந்துள்ள விவசாயிகள், தினக்கூலிகள்  உள்ளிட்டோருக்கு உதவுவதற்காக மத்திய அரசு நேற்று 1.70 லட்சம் கோடிக்கான நிவாரண நிதியை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த 3  மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் சமையல் கேஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி திட்டம், அரசு  சரியான வழியில் செல்வதற்கான முதல் நடவடிக்கை. ஊரடங்கு உத்தரவால் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், தினக்கூலிகள்,  தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது,’ என தெரிவித்துள்ளார்.

Tags : Sonia ,doctors , Corona virus, PM Modi, Sony, letter, doctors
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி...