×

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்திய அரசு சலுகை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க தேவையில்லை: எல்லா ஏடிஎம்.களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால்,  பொதுமக்களுக்கு வங்கிகள் சார்ந்த பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி,  வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க தேவையில்லை, மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை முதல் வரும் 31ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கி சேவையில் பல்வேறு சலுகைகள் மக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில்  கூறியதாவது:

* வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்ற விதியில் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, அடுத்த 3 மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு குறைந்தபட்ச இருப்புதொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது.
* ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர், சேமிப்பு கணக்கு இல்லாத மற்றொரு வங்கியின் ஏடிஎம்.மில் பணம் எடுக்க வசூலிக்கப்பட்டு வரும் கட்டணமும் அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது. தேவைப்பட்டால் இந்த சலுகைகள் நீட்டிக்கப்படும்.
* வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில், அனைத்து வர்த்தக நிதி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.  கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தனி நபர்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* மார்ச்- மே மாதத்துக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ₹5 கோடி வரை வருவாய்  கொண்ட நிறுவனங்கள் தாமதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்தால் தாமத கட்டணம், அபராதம், வட்டி ஆகிய எதுவும் வசூலிக்கப்படாது.
* பங்கு சந்தைகள் தினமும் 3 முறை கண்காணிக்கப்படும்.
* கடந்த பிப்ரவரி 24ம் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71.94 ஆக இருந்தது. இது நேற்று ₹76.02 ஆக சரிந்தது.
கொரோனா தாக்குதலால் தொழில் துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம்.
* கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.
* காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* ஜிஎஸ்டி, சுங்க வரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய, தொழிற்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
* ஆதார் - பான் எண் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
* தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்ட 60 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
* ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் தொழில் துறையினரின் வசதிக்காக  ஜூன் 30ம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : government ,ATMs , Corona virus, central government, bank account
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...