தேனி: தமிழகம் முழுவதும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் 2 பெட்டகம் வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், மருத்துவமனைகள் மூலம் தலா ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என டாக்டர்கள் சிலரே புகார் கூறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து, கருவுற்ற 2ம் மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், 4ம் மாதத்தில் 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
ஒவ்வொரு பெட்டகத்திலும் சத்துமாவு, இரும்பு சத்து டானிக், உலர் பேரீச்சை பழம், புரதச்சத்து பிஸ்கெட், ஆவின் நெய், குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். மீதப்பணம் 14 ஆயிரம் ரூபாய் பல்வேறு தவணைகளாக வழங்கப்படும். அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் தலா ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றொரு பெட்டகம் மருத்துவமனைகளுக்கே விநியோகிக்கப்படுவதில்லை. ஆனால் விநியோகிக்கப்பட்டதாகவும், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கணக்கு எழுத வேண்டும் என சுகாதார, மருத்துவத் துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது குறித்து டாக்டர்கள் சிலர் கூறுகையில், ‘‘கர்ப்பிணிகளுக்கு தரும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் கூட முறைகேடு நடக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த மோசடி தொடர்ந்து நடக்கிறது. இந்த முறைகேட்டில் வலுவான அரசியல் பின்புலம் உள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, அரசு கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டசத்து பெட்டகம் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் முறையாக சென்றடைய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
