×

பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் 500 சவரன், ரூ.18 லட்சத்தை சுருட்டிய வடமாநில கொள்ளையன் டெல்லியில் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொள்ளையனை திருப்பூர் அழைத்து வர போலீஸ் திட்டமிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இதில் கிளை மேலாளர் உள்பட 9 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.,21) வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அலுவலா்கள் வங்கியைத் திறந்து பணியைத் தொடங்க ஆயத்தமாயினர். அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர். வங்கியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலிகளை வெட்டியும் அறுத்தும் மர்ம நபர்கள் வங்கியில் புகுந்தது தெரியவந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு வங்கிக் கிளை மேலாளர் சிவராமகிருஷ்ணன் தகவல் கொடுத்தார்.

திருப்பூா் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், ஆய்வாள் அருள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கியில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.18 லட்சம் ரொக்கம் மற்றும் 500 சவரன் திருடுபோனது தெரியவந்தது.

மேலும் 3 பெரிய லாக்கர்களில் இருந்த 114 பேருடைய பாதுகாப்பு பெட்டகம், வெல்டிங் மெஷினால் அறுக்கப்பட்டு அதில் பொதுமக்கள் வைத்திருந்த உடமைகள் திருடப்பட்டுள்ளன. வங்கியில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து காட்சிகளைப் பதிவு செய்யும் கணினி மென்பொருளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க மாவட்ட எஸ்.பி.திஷா மிட்டல் தலைமையில் 3 டிஎஸ்பி மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது ஏற்கனவே டெல்லியில் பல வழக்குகள் உள்ளது.

Tags : SBI ,robber ,Delhi Tirupur ,Palladam North Indian ,arrests ,robbery , Tirupur, SBI Banking, robbery, theft, arrests in Delhi
× RELATED எஸ்பிஐ வட்டி குறைப்பு