×

காசிமேட்டில் நடந்த ரவுடி கொலையில் 6 பேர் சரண்

தண்டையார்பேட்டை: காசிமேடு ரவுடி கொலை வழக்கில், 6 பேர்  போலீசில் சரணடைந்தனர்.காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் திவாகர் (28), பிரபல ரவுடி. இவர் மீது மூன்று கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த சில மாதங்களாக விசைப் படகுகளுக்கு கேன் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.  அதன்படி, நேற்று முன்தினம் இரவு, காசிமேடு கடற்கரையில் விசைப் படகுகளுக்கு கேன் தண்ணீர் சப்ளை செய்துவிட்டு, காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நல சங்க அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த, 8 பேர், திவாகரை மறித்து அரிவாளால் ஓட ஓட வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திவாகரை கொலை செய்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ஆண்டனி (24), லோகேஷ் (25), ஸ்டீபன் (27), விமல் (25), சரத் (24), வேல்முருகன் (26) ஆகியோர் நேற்று காசிமேடு போலீசில் சரணடைந்தனர். போலீசார், இவர்களை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Charan ,Rowdy , Kasimedu, Rowdy Murder, 6 Charan
× RELATED கொத்தனார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வாலிபர் சரண்