×

பொது விநியோகம் மூலம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: சிறப்பு பொது விநியோகம் மூலம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டின் கால அவகாசம் வரும் 29ம் தேதியோடு நிறைவடைவதால், அதனை நீட்டிக்குமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டம் நீக்கப்பட்டால் வெளி சந்தைகளின் விலை கட்டுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள தகவலில், ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டம் மூலம் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் லெண்டின் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் கால அவகாசம் இம்மாதம் 29ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்க ரேஷன் அட்டைதாரர்கள் ஆர்வம் காட்டுவதால் சிறப்பு விநியோக திட்டத்தை நீட்டிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதனை ஏற்று 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்னும் ஒரு ஆண்டுக்கு அதாவது 2021ம் ஆண்டு பிப்ரவரி வரை கனடா மஞ்சள் லேண்டில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மக்கள் ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ration shops , Public Distribution, Ration Shop, Duvaram Pappu, Palm Oil, Project Extension, Govt
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு