×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந் 19ம் தேதி காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 225 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பேக்கிங் செய்த பட்டாசுகளை ஒரு வாகனத்தில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அப்போது ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 அறைகள் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியில் இருந்த சாத்தூர் அருகே மீனம்பட்டியை சேர்ந்த கார்த்திக், பாண்டியராஜன் (28), பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(58) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்தவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி, வள்ளியம்மாள், விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : explosion ,fireworks factory ,Sathur , Satur, fireworks, explosion, death
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு