×

உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: போக்குவரத்து பாதிப்பு

ஆலந்தூர்: உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பரங்கிமலை முதல் மேடவாக்கம் வரை செல்லும்  மேடவாக்கம் பிரதான சாலை 9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில், ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணி, சாலையோரம் மற்றும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலையை அகலப்படுத்திய இடங்களில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் அமைக்காததால், புதிதாக சாலை அமைத்தும் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், தனியார் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது.   இச்சாலையில் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில்  ஒருபுறம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன், மறுபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.   ஆனால், அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை.

கால்வாய் பணிக்காக    தோண்டி எடுக்கப்பட்ட  மண்ணை  சாலை ஓரத்தில் கொட்டியுள்ளதால்   வாகனங்கள்  செல்ல முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்குள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சாலையோர பள்ளத்தால் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சாலை விரிவாக்கப் பணி இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

ஆங்காங்கே தொடங்கிய மழைநீர் கால்வாய் பணிகள் முழுமையாக முடியாமல் பல மாதங்களக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியே இதுவரை முடியாமல் இருக்கும் பட்சத்தில், சாலையை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் எவ்வாறு முடிப்பார்கள்?.  ஒரு சில இடங்களில் சாலையை அகலப்படுத்தி உள்ளனர். ஆனால், அங்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் அமைக்கவில்லை. இதனால், இரவில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மின் கம்பங்களில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமின்றி சாலையை அகலப்படுத்தவும், மழைநீர் கால்வாய் அமைக்கவும் பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் தடுப்பு ஏதும் இல்லாததால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை நேரில் பார்வையிட்டு, சாலை மற்றும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : road , Ullakaram , metavakkam
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி