×

கொரோனா வைரசால் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு தலைவலி, காய்ச்சல் மருந்து கூட கிடைக்காது: விலையும் அதிகரிக்கும் அபாயம்; பிக்கி எச்சரிக்கை

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைவலி, காய்ச்சல், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட, அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரைதான் இருப்பு உள்ளன. எனவே, அடுத்த மாதம் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என பிக்கி தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரசால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தொழில்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கொரோனா வைரசால் மருந்து பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறது. இந்தியாவில் மருந்து உற்பத்திக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது.

 ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், வலி நிவாரணி மற்றும் காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டெல்மிசார்டான், நோய் எதிர்ப்பு மருந்துகளான ஜென்டாமைசின் சல்பேட், ஆம்பிசிலின் டிரைஹைட்ரேட், சிப்ரோபிளாக்சன் ஹைட்ரோகுளோரைடு ஆகியவை இந்த மாதம் 20ம் தேதி வரைதான் இருப்பு உள்ளன. மற்றொரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான நியோமைசின் சல்பேட் மே 20 வரையிலும், நீரிழிவு மருந்தான மெட்பார்மின் ஹைட்ரோகுளாரைடு மார்ச் 20ம் தேதி வரையிலும் இருப்பு உள்ளன.

சீனாவில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த மாதத்துக்கு பிறகும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் விலை அதிகரிக்கும் என பிக்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல், ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உதிரிபாகங்களுக்கு 85 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகிறது. மாதம் சராசரியாக ₹8,000 கோடிக்கு இந்த இறக்குமதி நடைபெறுகிறது. மேலும், சோலார் கருவிகள் உற்பத்திக்கும் சீனா சார்ந்துள்ளோம். இதனால் இவற்றின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும் என பிக்கி சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்தியாவில் தலைவலி, காய்ச்சல், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட, அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரைதான் இருப்பு உள்ளன.
* 70 சதவீத மருந்து மற்றும் மூலப்பொருட்களுக்கு சீனாவையே இந்திய மருந்துத்துறை நம்பியுள்ளது.
* கொரோனா வைரசால் சீனாவில் உற்பத்தி முடக்கம் அடுத்த மாதமும் நீடித்தால், இந்தியாவில் மருந்துகள் விலை உயரலாம்.
* 85 சதவீத மொபைல் போன் உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகிறது. இதனால் ஸ்மார்ட் போன் உற்பத்தி பாதிக்கும். இதுபோல் சோலார் கருவிகள் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

Tags : India , Impact,coronavirus, Headache, fever ,medication
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!