×

சி.பி.ஐ.யில் வேலை தருவதாக கூறும் இணையதள விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு CBI எச்சரிக்கை

சென்னை: சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கி தருவதாக இணையதள வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது. சட்டம், சைபர், தரவு பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடை அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை அறிவித்து சிபிஐ நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து, வேலையும் வாங்கி தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் பெறப்படுவதாக சிபிஐயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசடியில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உஷார் படுத்தி சிபிஐ சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களது பயிற்சி திட்டத்தை சில இணையதளங்கள் குறிப்பிட்டு, சிபிஐ- யின் வேலை வாய்ப்பு என கூறுவதாக எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த இணையதளங்களில் பயிற்சி காலத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை அல்லது சம்பளம், சிபிஐ விதிமுறைகளின் கீழ் வழங்கப்படும் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமின்றி பயிற்சி காலம் முடிந்ததும், சிபிஐ வேலை வாய்ப்பினை வழங்கும் என்றும் மக்களுக்கு தவறான தகவலை வழங்குகின்றன. 6 முதல் 8 வாரங்களுக்கு சி.பி.ஐ. அளிக்கிற பயிற்சிக்கு எந்த விதமான ஊதியமும் தரப்பட மாட்டாது. சிபிஐ-யின் பிரதிநிதி என்று தங்களது இணையதளங்களில் தவறான தகவல்களை வழங்குகிற தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்தவொரு தனி நபரும் செலுத்துகிற தொகைக்கு எந்த வகையிலும் சிபிஐ பொறுப்பேற்காது. இதுபோன்ற போலி இணையதளங்களை கையாளும் எவரையும், அல்லது நிறுவனங்களையும், யாரேனும் நாடினால் அது அவர்களது சொந்த பொறுப்புதான். இதன்மூலம், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் எந்த ஒரு இழப்புக்கும் சிபிஐ பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : public ,CBI CBI ,department , CBI, Jobs, Internet Advertising, Do Not Cheat, Public, CBI Alert
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...