வங்கிக் கடன் ரூ.40 கோடிக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வங்கிக் கடனுக்கு ஈடாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதற்கிடையே கத்தார் தேசிய வங்கி லண்டன் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான ‘போர்ஸ் இந்தியா’ கத்தார் தேசிய வங்கியில் சுமார் ரூ.47.23 கோடி கடன் வாங்கியுள்ளது.

அந்த கடனுக்கு பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உத்தரவாதமும் விஜய் மல்லையா அளித்துள்ளார். இந்த கடனில் தற்போது வட்டியுடன் போர்ஸ் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி இன்னும் தரவேண்டியுள்ளது. இந்த பாக்கி தொகைக்காக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு படகை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கத்தார் தேசிய வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அந்த சொகுசு படகை விற்று அந்த பணத்தை கத்தார் தேசிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : court orders ,London ,Vijay Mallya , Bank Loan, Vijay Mallya, Luxury Boat, London Court
× RELATED ஆந்திர மாநிலம் சித்தூரில் 6 வயது...